இந்த பதிவில் வல்லாரைக் கீரை சமையல் வகைகளான வல்லாரைக் கீரை கூட்டு, வல்லாரை ஊறுகாய் மற்றும் வல்லாரைக் காபி எவ்வாறு செய்வது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
வல்லாரை
அறிவு முதிர்ச்சியையும் நினைவாற்றலையும் வழங்கக்கூடிய வல்லாரைக் கீரையை, இந்து மதத்தில் கல்விக்கும் அறிவுக்கும் உரிய கடவுளான சரஸ்வதிக்கு நிகரான இதை, சரஸ்வதி மூலிகை என்று சொல்வார்கள்.
மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தி, நினைவாற்றலை மேம்படுத்துவதில் வல்லாரைக்கு நிகர் எதுவும் இல்லை.
வல்லாரையை உணவாகக் கொண்டால், வாயு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும்.
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். பலவகையான விஷக்கடிகள் சரியாகும். வயிற்றில் கிருமிகள், காக்காய் வலிப்பு, இதய நோய்கள், குஷ்டம், சர்க்கரை நோய், தோல் நோய்கள், மாதவிலக்குக் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள், உடல் பலவீனம் போன்ற பலவகையான நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லாரை முன்னிலையில் உள்ளது.
வல்லாரைக் கீரையில் நார்ச் சத்து, புரதச் சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் மிகுதியாக உள்ளன.
வல்லாரை மருத்துவ பயன்கள்
வல்லாரைக் கீரை மருத்துவ பயன்கள் பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தோல் நோய் :
வல்லாரை இலையில் இருந்து பால் எடுத்து தினமும் அதிகாலையில் 30 மி.லி. அளவில் சாப்பிட்டு வந்தால் குஷ்ட நோய்கள், தோல் நோய்கள், ரத்தத்தில் ஏற்படும் பாதிப்புகள் குணமாகும்.
குஷ்ட நோய் :
வல்லாரை, வெள்ளெருக்கு, ஆடுதீண்டாப்பாளை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவுக்குத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எப்படிப்பட்ட குஷ்டநோய்களும் குணமாகும்.
மன நோய் :
அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று அடுத்த நான்கு மணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்தவிதமான அச்சம், பயம் போன்ற பலவகையான மனநோய்களும் விலகும்.
குரல் வளம் :
தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், உடல் வலிமை பெறும். இனிமையான குரல் வளம் உண்டாகும்.
இதய நோய்கள் :
வல்லாரை இலை (4), அக்ரூட் பருப்பு (1), பாதாம் பருப்பு (1), ஏலக்காய் (3), மிளகு (3) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.
குடல் பூச்சி :
வல்லாரைச் சாற்றில் வாய்விளங்கத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரவில் 5 கிராம் அளவு சாப்பிட்டால் வயிற்றுப்பூச்சி, இசிப்பூச்சி, தாக்குப்பூச்சி போன்றவை மடியும்.
மஞ்சள் காமலை :
வல்லாரைச் சாறு ( 15 மி.லி.), கீழாநெல்லி இலைச்சாறு (15மி.லி.), பசும்பால் (100 மி.லி.) ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், முற்றிய மஞ்சள் காமாலைகூட குணமாகும்.
சளி இருமல் :
வல்லாரைச் சாற்றில் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் போன்றவை விலகும்.
மாதவிலக்கு கோளாறு :
வல்லாரைச் சாற்றில் பெருஞ்சீரகத்தை ஊறவைத்து எடுத்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.
சர்க்கரை நோய் :
வல்லாரை இலை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி, சம அளவு எடுத்து ஒன்றாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.
வல்லாரைக் கீரை சமையல் :
பல நன்மைகள் நிறைந்த வல்லாரைக் கீரையை தினசரி உணவுகளிலும் சேர்த்துக் கொள்ளும் வகையில் வல்லாரை கீரையை பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப் படும் உணவு வகைகளான வல்லாரைக் கூட்டு, வல்லாரை ஊறுகாய், வல்லாரை காபி போன்ற உணவு வகைகளும் உள்ளன.
வல்லாரை கூட்டு
வல்லாரைக் கூட்டு வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு இது. அற்புதமான நினைவாற்றலைத் தரக்கூடியது. காக்காய் வலிப்பு, நரம்புக் கோளாறுகளும் குணமாகும்.
மேலும், உடல் எடை அதிகரித்து அவதிப்படுபவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவு இது
தேவையான பொருள்கள்
- வல்லாரைக் கீரை – 1 கட்டு
- இஞ்சி (தோல் நீக்கியது) – 50 கிராம்
- மிளகு – அரை ஸ்பூன
- சிறு பருப்பு – 100 கிராம்
- வெங்காயம் – ஒன்று
- பச்சை மிளகாய் – 2
- கடுகு – அரை ஸ்பூன்
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
வல்லாரைக் கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
சிறு பருப்பை வேகவைத்துக் கடைந்து, கீரையுடன் நறுக்கி வைத்துள்ளதையும் சேர்த்து, மீண்டும் கொதிக்கவைக்கவும்.
பிறகு எண்ணெய்யில் கடுகு தாளித்துக் கொட்ட வேண்டும். சுவையான வல்லாரைக் கூட்டு தயார்…¡
உடல் எடையைக் குறைப்பதுடன், ரத்தத்தில் உப்பின் அளவையும் குறைக்கும். உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தக் கூடியது
வல்லாரை ஊறுகாய்
வல்லாரை ஊறுகாய் குடற்புண் இருந்தும் ஊறுகாய் சாப்பிட ஆசைப்படுபவர்களுக்கு ஏற்ற மருந்து இது.
தேவையான பொருள்கள்
- வல்லாரைக் கீரை – 200 கிராம்
- தேங்காய்த் துருவல் – ஒரு மூடி
- பச்சை மிளகாய் – 5
- சின்ன வெங்காயம் – 50 கிராம்
- எலுமிச்சை – ஒன்று
- உப்பு – தேவையான அளவு
- வெந்தயம் – அரை ஸ்பூன்
செய்முறை
பொடியாக நறுக்கிய வல்லாரைக் கீரையுடன் பச்சை மிளகாய், மற்றும் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
பிறகு, தேங்காய்த் துருவலையும் சேர்த்து, தேவையான அளவில் உப்புப் போட்டு, எலுமிச்சையைப் பிழிந்துகொள்ளவும்.வெந்தயத்தை வறுத்துச் சேர்க்கவும்.
சிறிது நல்லெண்ணெய்யில் கடுகைத் தாளித்துச் சேர்க்கவும்.
வல்லாரை காபி
வல்லாரைக் காபி குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. சர்க்கரை நோய், தூக்கமின்மை மற்றும் மன நோய்களுக்கு அற்புதமான பலன்களைத் தரக்கூடியது.
தேவையான பொருள்கள்
- வல்லாரை (நிழலில் உலர்த்தியது) – கால் கிலோ
- மிளகு – 25 கிராம்
- சுக்கு – 25 கிராம்
- ஏலக்காய் – 10 கிராம்
- தனியா – 100 கிராம்
செய்முறை
மேற்கண்ட அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும்.
இதில், 2 ஸ்பூன் பொடியை எடுத்து தேவையான தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி பால் சேர்த்துக் குடிக்கவும்.