தூதுவளை
தூதுவளை ஒரு மூலிகை தாவரமாகும். இதன் தாவரவியல் பெயர் சோலானம் ட்ரிலோபாட்டம் (Solanum Trilobatum) ஆகும்.
பொதுவாக இது ஆங்கிலத்தில் “Purple Fruited Pea Egg Plant” என்றும் அழைக்கப்படுகிறது. இது சித்த மருத்துவத்தில் காயகல்ப மூலிகை என்று அழைக்கப்படும் முக்கியமான மூலிகைகளில் ஒன்றாகும்.
தூதுவளையில் உள்ள சத்துக்கள்
100 கிராம் தூதுவளைக் கீரையில் உள்ள சத்துகள்
- நீர்ச்சத்து – 84.7 கிராம்
- கொழுப்பு – 0.7 கிராம்
- புரதம் – 3.9 கிராம்
- நார்ச்சத்து – 2.3 கிராம்
- தாது சத்துக்கள் – 3.8 கிராம்
- சர்க்கரை சத்து – 4.6 கிராம்
- சுண்ணாம்பு சத்து – 334 மி.கி.
- பாஸ்பரஸ் – 52 மி.கி.
- இரும்பு – 5.0 மி.கி.
- ஆற்றல் – 40 கலோரி
தூதுவளை நன்மைகள்
சுவாச பிரச்சனைகளுக்கு
காசநோய், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம், சைனஸ், மார்பு நெரிசல் மற்றும் பிற சுவாச பிரச்சனைகளுக்கான சிகிச்சையில் தூதுவளை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
தூதுவளையின் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு உதவுகிறது.
வலிமை, சகிப்புத்தன்மை, நினைவகம் மற்றும் மன திறன்கள்
ஆயுர்வேத மருத்துவத்தில் தூதுவளை ஒருவரின் வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் மன திறன்களை மேம்படுத்தக்கூடிய இயற்கை ஸ்டீராய்டாக கருதப்படுகிறது.
நினைவாற்றல் மற்றும் செவித்திறனை மேம்படுத்துவதாகவும் அறியப்படுகிறது.
சர்க்கரை நோய்
தூதுவளைக் கீரை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் உதவிகரமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் உள்ள எத்தனாலிக் சாறு இரத்த குளுக்கோஸின் அளவை நிர்வகிக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
சளி, இருமல் மற்றும் தொண்டை எரிச்சல்
போன்றவரு எந்தவொரு சாதாரண நபருக்கும், எளிதாக ஏற்படுகின்ற உடல் நல கோளாராகும்.
இருமல், சளி மற்றும் தொண்டை எரிச்சல் போன்றவற்றுக்கு தூதுவளையை உட்கொள்வது நிவாரணம் அளிக்கிறது.
புற்றுநோய்க்கு
புற்றுநோய் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் பயங்கரமான நோய்களில் ஒன்றாகும்.
தூதுவளையில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், தூதுவளை புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை மெதுவாக்கும் திறனைக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தூதுவளை பயன்கள்
பாரம்பரியம் மற்றும் சித்த மருத்துவத்தில் தூதுவளை கீரை வகை உணவாகவும் மூலிகை வகை மருந்தாகவும் பல்லாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தூதுவளைக்கீரையை கொண்டு செய்யப்படும் சுவையான உணவு வகைகள் மற்றும் தூதுவளை மருத்துவ பயன்கள் பற்றி கொசுக்கப்பட்டுள்ளது.
தூதுவளை மருத்துவ பயன்கள்
பாரம்பரிய மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தில் தூதுவளை மருத்துவ பயன்கள் சிலவற்றை காணலாம்.
ஏதேனும் ஒரு உடல் நலக் கோளாறுக்காக தூதுவளைக் கீரையை மருந்தாகவும் அல்லது தொடர்ந்து உணவாகவும் உண்ணும் முன் மருத்துவ நிபுணர்களிடம் கலந்தாலோசித்துக் கொள்ளவும்.
1.தூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி, ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, குளிர்க்காய்ச்சல் போன்றவை குணமாகும்.
2. தூதுவளைக் கீரையுடன் அதிமதுரம், தனியா, உலர்ந்த திராட்சை ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சி கஷாயமாக்கி வடிகட்டிச் சாப்பிட்டால், இருமல், விடாத தும்மல், புகைச்சல் போன்றவை குணமாகும்.
3. தூதுவளைக் கீரையை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து, மிளகுத் தூள் மற்றும் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் நன்றாகப் பசி எடுக்கும்.
4. தூதுவளைக் கீரையுடன் சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள் சேர்த்துக் கொதிக்கவைத்து. வடிகட்டிச் சாப்பிட்டால் மூக்கடைப்பு, தும்மல், மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.
5. தூதுவளைக் கீரை (ஒரு கைப்பிடி), வெற்றிலை (ஒரு கைப்பிடி), சுக்குப் பொடி (25 கிராம்), மஞ்சள் (25 கிராம்) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, பட்டாணி அளவு மாத்திரைகளாகச் செய்து நிழலில் உலர்த்திப் பத்திரப்படுத்தவும். இதில் ஒரு மாத்திரையை உள்ளுக்குச் சாப்பிட்டு, ஒரு மாத்திரையை வெந்நீரில் கரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால், தலைவலி, தலைபாரம், சைனஸ் போன்றவை இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகும்.
6.தூதுவளைக் கீரையைப் பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகும்.
7. தூதுவளைக் கீரைச் சாற்றை 30 மி.லி. அளவில் தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
8. தூதுவளைக் கீரையுடன் சம அளவு வேப்பந்துளிர் சேர்த்து கஷாயமாக்கி, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், ரத்தம் தூய்மையாகும். கிருமிக் கோளாறுகள் நீங்கும்.
9.தூதுவளை கீரைச் சாற்றில் அதிமதுரத்தை ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கி, 2 கிராம் பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் டான்சில் எனப்படும் தொண்டைச் சதை குணமாகும்.
10.தூதுவளைக் கீரையைக் காயவைத்துப் பொடியாக்கித் தினமும் சாப்பிட்டால், காது தொடர்பான நோய்கள் அனைத்தும் சரியாகும்.
தூதுவளை பொரியல்
தூதுவளைக் கீரை பொரியல் செய்முறை மற்றும் தேவையான பொருட்கள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருள்கள்
- முள் நீக்கிய தூதுவளை இலை – 10
- சின்ன வெங்காயம் – 5
- நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை :
தூதுவளை இலை, சின்ன வெங்காயம் இரண்டையும் பொடிப்பொடியாக அரிந்து நல்லெண்ணெய்யில் போட்டு வதக்கி, தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து இறக்கவும்.
இதைக் காலை மாலை என மூன்று நாள்கள் சாப்பிட்டால் இருமல், இளைப்பு போன்றவை குணமாகும்.
தூதுவளை அடை
தூதுவளை அடை செய்ய தூதுவளை இலையையும், சின்ன வெங்காயத்தையும் சமஅளவில் எடுத்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கால் கிலோ அரிசியை ஊறவைத்து அரைத்து, தூதுவளை இலை, சின்ன வெங்காயத்தையும் சேர்த்துப் பிசறி, சட்டியில் நல்லெண்ணெய் விட்டு அடை தட்டிஎடுக்கவும். சூடான தூதுவளைக் கீரை அடை ரெடி….!
தொடர்ந்து சில நாள்களுக்கு காலை மாலை இருவேளையும் சாப்பிட்டால் சளி, இருமல், இரைப்பு போன்றவை குணமாகும்.
தூதுவளை துவையல்
தூதுவளை துவையல் , சளி, கபம், ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.
தேவையான பொருள்கள்
- தூதுவளை இலை – 200 கிராம்
- கொத்தமல்லி – 1 கட்டு
- புதினா – 1 கட்டு
- உளுந்து – 50 கிராம்
- பெருங்காயம், உப்பு – தேவையான அளவு
- மிளகாய் வற்றள் – 5
- பூண்டு பல் – 8
- நெய் – 2 ஸ்பூன்
செய்முறை :
வாணலியில் பெருங்காயம், மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வறுத்தபிறகு உளுந்தை வறுக்கவும். தூதுவளை இலை, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை அரிந்து வதக்கிக் கொள்ளவும்.
அடுத்து, வறுத்த, வதக்கிய அனைத்தையும் நன்கு அரைக்கவும். வானலியில் நெய்விட்டு, கடுகு, பருப்பு சேர்த்துத் தாளித்து, அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். தூதுவளைக் கீரை துவையல் தயார்…!