பாலக்கீரை மருத்துவ பயன்கள் மற்றும் பாலக்கீரை சமையல்

0

பாலக்கீரை மருத்துவ பயன்கள் பற்றியும் பாலக் கீரை பச்சடி, பாலக் கீரை பன்னீர் மசாலா போன்ற பாலக் கீரை சமையல் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை பற்றி விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

பாலக்கீரை

பாலக்கீரையின் அறிவியல் பெயர் ஸ்பைன்னாசா ஓலேராசா  (Spinacea oleracea)  ஆகும்.

பாலக் கீரை

பொதுவாக தென்னிந்தியாவில் கிடைக்கும் எல்லா வகைக் கீரை மருத்துவ குறிப்புகள் பற்றி சித்தர் பாடல்கள் உள்ளன.

ஆனால் இது தென்னிந்திய, குறிப்பாக தமிழக மக்களின் உணவு முறைக்குள் வராத ஒரு கீரை என்பதால் இந்தக் கீரைக்கு சித்தர் பாடல் இல்லை.

இருந்தாலும், தமிழக மக்களுக்கு நன்று பரிச்சயமான பருப்புக் கீரை, பசலைக் கீரை, கொடிப் பசலைக் கீரை போன்ற கீரை வகைகளுக்கு இணையானது பாலக் கீரை.

பாலக்கீரையில் வைட்டமின்கள், கால்சியம், இரும்புச் சத்து போன்றவை அதிக அளவில் உள்ளன.

பாலக் கீரையின் மருத்துவப் பயன்கள்

உடலைக் குளிர்ச்சியாக வைக்கக்கூடிய இந்தக் கீரை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களைக் குணப்படுத்தக் கூடியது.

ஆயுர்வேத மருத்துவத்தில் இந்தக் கீரைக்கு முக்கிய இடம் உண்டு. பாலக் கீரை மருத்துவ பயன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இரத்த விருத்தியாக :

பாலக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்து அவித்துச் சாப்பிட்ட்டு வர இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

சிறுநீர்ப் பை பலப்பட :

பாலக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாய மாக்கிச் சாப்பிட்டால், சொட்டுச் சொட்டாக சிறுநீர் வெளி யேறும் பிரச்னை தீரும். சிறுநீர்ப்பையும் வலுப்படும்.

மலச்சிக்கல் நீங்க :

பாலக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் சரியாகும்.

வெள்ளைப் படுதல் குணமாக :

பாலக் கீரை, சீரகம், பூண்டு ஆகியவற்றை அரைத்து 3 கிராம் அளவில் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.

பித்தம் நீங்க :

பாலக் கீரைச் சாறு எடுத்து அதில் எலுமிச்சம் பழத்தை (பாதி அளவு) பிழிந்து சாப்பிட்டால் பித்தம் தொடர்பான நோய்கள் விலகும்.

ஆண்மை குறைபாடு நீங்க :

பாலக் கீரையுடன் குடை மிளகாய், பூண்டு, கசகசா ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு குணமாகும்.

விந்து விருத்தி :

பாலக் கீரையுடன் முளைகட்டிய பச்சைப் பயிரைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

வயிறு குறைய :

பாலக் கீரையுடன் வேப்பிலை, ஓமம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் பெரு வயிறு குறையும்.

உடல் வலிமை பெற :

பாலக் கீரையை அரிந்து, சின்ன வெங்காயம், சீரகம், மிளகு ஆகியவற்றுடன் சேர்த்து வதக்கிச் (அசைவம் சாப்பிடுபவர்கள் நாட்டுக்கோழி முட்டையைச் சேர்த்துக் கொள்ளலாம்.) சாப்பிட்டால் உடல் வலிமை உண்டாகும்.

கண் ஆரோக்கியம் :

பாலக் கீரையைத் தொடர்ந்து 21 நாள்களுக்கு கடைசலாகவோ, சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் கண் தொடர்பான அனைத்துப் பாதிப்புகளும் குணமாகும்.

 

பாலக் கீரை சமயல்

பாலக்கீரை பன்னீர் மசாலா

பாலக் கீரை பன்னீர் மசாலா செய்முறை மற்றும் தேவையான பொருட்கள் பற்றி காணலாம்.

தேவையான பொருள்கள்

  • பாலக் கீரை – ஒரு கட்டு
  • சோம்பு – ஒரு ஸ்பூன்
  • தனியா – ஒரு ஸ்பூன்
  • பட்டை – 3
  • பன்னீர் – 100 கிராம்
  • எண்ணெய் – 4 ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் – 4
  • எலுமிச்சம் பழம் – ஒன்று
  • தேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி
  • சின்ன வெங்காயம் (அரிந்தது) – ஒரு கைப்பிடி
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

பாலக் கீரையைச் சன்னமாகவும், சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி இரண்டாகவும் அரிந்துகொள்ளவும்.

அடுத்து, தனியா, மிளகாய் வற்றல், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை எண்ணெய் சேர்த்து வதக்கி அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த மசாலா, பாலக் கீரை இரண்டையும் வாணலியில் போட்டு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து,

சோம்பு, பட்டை இரண்டையும் தட்டிச் சேர்த்து தட்டுப் போட்டு வாணலியை மூடவும்.

கீரை வெந்ததும், பன்னீர், எலுமிச்சைச் சாறு சேர்த்து மீண்டும் வேகவைத்து இறக்கவும். பாலக் கீரை பன்னீர் மசாலா தயார்….!

பாலக்கீரை பச்சடி

சுவை மற்றும் ஆரோக்கியமான பாலக் கீரை பச்சடி செய்முறை மற்றும் தேவையான பொருள்கள் பற்றி காணலாம்.

தேவையான பொருள்கள்

  • பாலக் கீரை
  • தயிர் – 2 கப்
  • எலுமிச்சை – பாதி
  • இஞ்சி – ஒரு துண்டு
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
  • வெள்ளரிக்காய் – ஒன்று
  • பச்சை மிளகாய் – 5
  • உருளைக் கிழங்கு – 2
  • உப்பு – தேவையான அளவு
  • தக்காளி சாஸ் -5 ஸ்பூன்

செய்முறை

பசலைக் கீரையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

இஞ்சி, பச்சை மிளகாய், வெள்ளரிக்காய் ஆகியவற்றை அரைகுறையாக அரைத்து, பிறகு கீரையையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

இதைத் தயிரில் கலந்து, உப்பு சேர்த்து, தக்காளி சாஸ், எலுமிச்சைச் சாறு மற்றும் கொத்த மல்லியைச் சேர்த்துக்கொள்ளவும்.