முடக்கத்தான் கீரை நன்மைகள் மற்றும் முடக்கத்தான் கீரையை பிரதானமாகக் கொண்டு சமைக்கப்படும் உணவுகளான முடக்கத்தான் கீரை ரசம் மற்றும் முடக்கத்தான் கீரை சூப் போன்ற உணவுகளை சமைக்கும் செயல் முறை விளக்கப்பட்டுள்ளது.
முடக்கத்தான் கீரை :
முடக்கத்தான் கீரை பொதுவாக அனைவராலும் அறியப் படாத கீரை வகைகளுள் ஒன்றாகும்.
தமிழ் பாரம்பரிய மருத்துவத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக மூலிகை மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தப் பட்டுவருகிறது.
முடக்கத்தான் கீரை நன்மைகள்
பொதுவாக முடக்கத்தான் கீரையில் ஏராளமான மருத்துவ பண்புகள் அடங்கியுள்ளன. இருப்பினும் ஏதாவது ஒரு உடல் நலக் கோளாறு இருப்பின் சுகாதார அல்லது மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது சிறந்தது.
சிறுநீர் பிரிய :
முடக்கத்தான் கீரையுடன் சிறிது சதகுப்பையைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
மலச்சிக்கல் குணமாக :
முடக்கத்தான் கீரையுடன் சிறிது வாய்விளங்கத்தைச் சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு இரவுஉணவுக்குப் பிறகு சாப்பிட்டால் மலச்சிக்கல் சரியாகும்.
பசி எடுக்க :
முடக்கத்தான் கீரையுடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.
மூட்டு வலி குணமாக :
முடக்கத்தான், வாத நாராயணன் இரண்டைய யும் சம அளவு எடுத்து, பூண்டு (ஒரு பல்), மஞ்சள் தூள் (2 சிட்டிகை) சேர்த்து அரைத்து, அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட மூட்டுவலியும் குணமாகும்.
வாதம் குணமாக :
முடக்கத்தான் கீரைச் சாற்றில், சுக்கு, மஞ்சள், வெந்தயம் ஆகியவற்றைச் சம அளவு போட்டு ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் வாத நோய்கள், பக்கவாதம், முடக்குவாதம், இடுப்புவலி, முதுகுத்தண்டு வலி போன்றவை குணமாகும்.
வலிமை உண்டாக :
முடக்கத்தான் கீரைச் சாற்றில் உளுந்து, கருப்பு எள் இரண்டையும் சம அளவு போட்டு ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, 2 ஸ்பூன் அளவு எடுத்து, சின்ன வெங்காயம் சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்தால் உடல் வலிமை உண்டாகும்.
தோல் நோய் குணமாக :
முடக்கத்தான் கீரைச் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் கலந்து படை, சொறி, கரப்பான் போன்ற தோல் நோய்கள் மீது பூசினால், குணம் பெறலாம்.
மூல நோய் குணமாக :
முடக்கத்தான் கீரையுடன் 2 கடுக்காயைத் தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மூல நோய்கள் குணமாகும்.
மாதவிலக்கு உண்டாக :
முடக்கத்தான் கீரைச் சாற்றில் கறுப்பு எள்ளை அரைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்கு உண்டாகும்.
காது வலி குணமாக :
முடக்கத்தான் கீரைச் சாற்றில் சில துளிகளைக் காதில் விட்டால், காது வலி குணமாகும்.
முதக்கத்தான் கீரை சமையல்
முடக்கத்தான் கீரை ரசம்
முடக்கத்தான் கீரை ரசம் செய்முறை மற்றும் தேவையான பொருட்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
முடக்காத்தான் கீரை ரசம் இரவில் தயார் செய்து அதிகாலையில் ஒரு டம்ளர் வடிகட்டிக் குடிக்கவும். இதனால் பேதியாகி, பித்தம் வெளிப்படும். கை,கால், இடுப்பு வலிகள் குணமடையும். வயதானவர்களுக்கு மாதம் ஒருமுறை இதைக் கொடுத்தால், பல நோய்கள் குணமாகும்.
தேவையான பொருள்கள்
- முடக்கத்தான் கீரைக் காம்பு – 5 கைப்பிடி
- எலுமிச்சை – 1
- தக்காளி – 3 ஸ்பூன்
- சீரகம் – 3 ஸ்பூன்
- மிளகு – அரை ஸ்பூன்
- பூண்டு – 6 பல்
- உப்பு – தேவையான அளவு
- நெய் – ஒரு ஸ்பூன்
- தண்ணீர் – 4 டம்ளர்
செய்முறை
முடக்கத்தான் கீரைக் காம்பை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வேகவைக்கவும்.
நன்கு வெந்ததும், வாணலியில் நெய்விட்டு, சீரகம், மிளகு ஆகியவற்றைப் பொடியாக்கிப் போட்டு வறுத்து,
வெந்த முடக்கத்தான் கீரைக் காம்பு ரசத்தைச் சேர்த்து, தக்காளியையும் கரைத்துச் சேர்க்கவும்.
பிறகு பூண்டு, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை அரைத்துச் சேர்த்துக் கொதிக்கவைத்து, தேவையான உப்பு சேர்க்கவும்.
முடக்கத்தான் கீரை சூப்
முடக்கத்தான் கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடக்கத்தான் கீரை சூப்பை வாரம் ஒருமுறையாவது சாப்பிட்டால் வயிறு சுத்தமாகும். வாதம் தணியும்.
தேவையான பொருள்கள்
- முடக்கத்தான் கீரை – 2 கைப்பிடி
- சீரகம் – அரை ஸ்பூன்
- மிளகு – அரை ஸ்பூன்
- கசகசா – அரை ஸ்பூன்
- பூண்டு – 6 பல்
- இஞ்சி – ஒரு துண்டு
- தேங்காய்த் துருவல் – 50 கிராம்
- சோம்பு – அரை ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தனியா பொடி – 2 ஸ்பூன்
- பசுநெய் – 5 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் (அரிந்தது) – ஒரு கைப்பிடி
செய்முறை
அரிசி களைந்த நீரில் வெங்காயத்தை நறுக்கிப்போட்டு, சோம்பு, தேங்காய்த் துருவல், கசகசா ஆகியவற்றை அரைத்துச் சேர்த்து, உப்பு, கொத்தமல்லி, முடக்கத்தான் இலையைச் சேர்த்து வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, சிறிது நெய் சேர்த்து சூப்பில் கொட்டிக் கிளறவும்.
சுவையான முடக்கத்தான் கீரை சூப் தயார்….!