கொடிப்பசலைக் கீரை நன்மைகள் மற்றும் சமையல் முறைகள்

0

கொடிப்பசலைக் கீரை நன்மைகள் மற்றும் கொடி பசலை கீரை சமையல் வகைகளான கொடிப் பசலைக் கீரை பச்சடி, கொடிப் பசலைக் கீரை சூப் போன்றவை செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை பற்றி விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

கொடிப்பசலைக் கீரை :

பசலையில் கொடிப்பசலை, குத்துப்பசலை, தரைப்பசலை, வெள்ளைப் பசலை, சிலோன் பசலை என பலவகை உள்ளன. அவற்றில் கொடிப்பசலைக் கீரை  பயன்கள், மற்றும் கொடி பசலை கீரை சமையல் குறிப்புகள் சிலவற்றை காணலாம்.

கொடிப்பசலைக் கீரை

கொடிப் பசலைக் கீரையில், வெள்ளை, சிவப்பு என இரு வகைகள் உண்டு. குணத்தின் அடிப்படையில் இரண்டும் ஒரே பண்புகளைக் கொண்டுள்ளன.

கொடிப்பசலைக் கீரையைச் சாப்பிட்டால் எப்படிப்பட்ட புண்ணும் ஆறிவிடும். நீர்க்கடுப்பு, மலக்கட்டு போன்றவற்றுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

 

கொடிப்பசலைக் கீரை நன்மைகள்

பொதுவான பாரம்பரிய மற்றும் சித்த மருத்துவத்தில் குறிப்பிடப் பட்டுள்ள சில கொடிப் பசலைக் கீரையின் மருத்துவப் பயன்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தொடர்ச்சியாக பயன்படுத்துவதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளவது நல்லது.

வெள்ளைப் படுதல் குணமாக :

கொடிப் பசலைக் கீரையை உளுந்து ஊறவைத்த தண்ணீர் சேர்த்து அரைத்துக் குடித்தால், உடல் சூடு, வெட்டைச் சூடு, வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.

தாகம் தீர :

கொடிப் பசலைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் தீராத தாகமும் நீரும்.

வேட்கை அதிகரிக்க :

கொடிப் பசலைக் கீரையுடன் இரண்டு குடை மிளகாய், ஒரு ஸ்பூன் கசகசா சேர்த்து வேகவைத்துக் கடைந்து சாப்பிட்டால் உடலுறவு வேட்கை அதிகரிக்கும்.

மலச்சிக்கல் நீங்க :

கொடிப் பசலைக் கீரை, கொத்தமல்லி விதை, சீரகம் மூன்றையும் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மலச்சிக்கல்குணமாகும்.

வீக்கம் குறைய :

கொடிப் பசலைக் கீரையை விளக்கெண்ணெய் மற்றும் மஞ்சளுடன் சேர்த்து வதக்கிக் கட்டினால், வீக்கம், கட்டிகள் போன்றவை கரையும்.

நீர்க் கட்டு குணமாக :

கொடிப் பாலைச் சாறு ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் சிறிது கற்கண்டு சேர்த்துக் கொடுத்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு குணமாகும்.

கண் எரிச்சல் நீங்க :

கொடிப் பசலைக் கீரையை அரைந்து தலையில் கட்டிக்கொண்டால், வெட்டைச்சூடு, கண் எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் தீரும்.

தலைவலி குணமாக :

கொடிப் பசலைக் கீரையை நீரில் போட்டு அலசினால் கொழகொழப்பான திரவம் கிடைக்கும். இதைத் தலை அல்லது நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும். நல்ல தூக்கமும் வரும்.

நீரடைப்பு நீங்க :

கொடிப் பசலைக் கீரை, கத்தரி இலை இரண்டையும் சம அளவு (ஒரு கைப்பிடி) எடுத்து கஷாயமாக்கி வடிகட்டி, நான்கு சிட்டிகை வெங்காரபஸ்பத்தைக் கலக்கிக் குடித்தால் நீர் அடைப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.

உயிரணுக்கள் அதிகரிக்க :

கொடிப் பசலைக் கீரைச் சாற்றில் பாதாம் பருப்பை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

 

கொடி பசலைக் கீரை சூப்

கொடிப்பசலைக் கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை பற்றி காணலாம்.

தேவையான பொருள்கள்

  • கொடிப் பசலைக் கீரை 2 கட்டு (200 கிராம் 3.
  • தக்காளி – 3
  • பெரிய வெங்காயம் – 2
  • பூண்டு – 6 பல்
  • கார்ன் ஃப்ளவர் – 3  ஸ்பூன்
  • மிளகுத் தூள் – ஒரு ஸ்பூன்
  • வெண்ணெய் – 50 கிராம்

செய்முறை :

கொடிப் பசலைக் கீரையைச் சுத்தம் செய்து, நறுக்கிய தக்காளி, மற்றும் வெங்காயத்தோடு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் போட்டு, பூண்டை வதக்கவும். பிறகு, அரைத்தவற்றைக் கொட்டி கொதிக்கவிட்டு மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து, இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.

வாணலியில் மீதம் உள்ள வெண்ணெயைப்போட்டு உருக்கி, கார்ன் ஃப்ளவரை போட்டு வதக்கி, அதில் வடிகட்டி வைத்துள்ள சூப்பைக் கொட்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். கொடிப் பசலைக் கீரை சூப் ரெடி…!

 

கொடி பசலைக் கீரை பச்சடி

கொடிப் பசலைக் கீரை பச்சடி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை பற்றி காணலாம்.

தேவையான பொருள்கள்

  • பசலைக் கீரை – ஒரு கட்டு
  • தயிர் – 400 மி.லி.
  • எலுமிச்சை – 1
  • கொத்தமல்லி – தேவையான அளவு
  • தக்காளி – 2
  • பச்சை மிளகாய் – 4
  • வெள்ளரிக்காய் – 1
  • உருளைக் கிழங்கு – 1
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

பசலைக் கீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

எலுமிச்சையில் இருந்து சாறு எடுத்து பச்சை மிளகாய், வெள்ளரிக்காய், தோல் நீக்கிய உருளைக் கிழங்கு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து தயிரில் கலந்து கொள்ளவும்.

அத்துடன் நறுக்கிய கீரையையும் சிறிதளவு உப்பையும் சேர்த்து, கொத்தமல்லி இலையைச் சிரிதாக நறுக்கிப் போடவும். அவ்வளவு தான் கொடிப்பசலைக் கீரைப் பச்சடி தயார்…!