அரைக் கீரை சமையல் அரைக் கீரை வடை, அரைக் கீரை தோசை, அரைக் கீரை கூட்டு

0

இந்த பதிவில் அரைக் கீரை சமையல் வகைகளான அரைக் கீரை வடை, அரைக்கீரை கூட்டு, அரைக் கீரை தோசை போன்ற ரெசிபிக்களை எவ்வாறு செய்வது என்பது பற்றி விரிவாக காணலாம்.

அரைக் கீரை சமையல்

எல்லா கீரை வகைகளைப் போல் அரைக் கீரையிலும் ஊட்டச் சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளது போல் உணவு வகைகளிலும் பன்னெடுங்காலமாக பயன் பட்டு வருகிறது.

அரைக் கீரை சமையல்

அரைக் கீரை சமையல் பல சுவை மற்றும் வகைகளில் சிறப்பாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. அதில் அரைக் கீரை வடை, அரைக் கீரை கூட்டு, அரைக் கீரை தோசை போன்ற அரைக் கீரை ரெசிப்பிகள் எவ்வாறு எளிய முறையில் செய்வது எப்படி என்று காணலாம்.

அரைக் கீரை வடை

வடை பல முறைகளில் செய்யப்பட்டு வருகிறது. அதில் கீரை வடை என்பது ஒரு ஆரோக்கியமான உணவு வகையாகும்.

அதிலும் குறிப்பாக அரைக் கீரை வடை பல ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ளது. இந்த பதிப்பில் அரைக் கீரை வடை செய்வது எப்படி என்பது பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருள்கள்

  • அரைக் கீரை (பொடியாக நறுக்கியது) – ஒரு கப்
  • உளுந்து – 2 கப்
  • வெங்காயம் (நறுக்கியது) – அரை கப்
  • பச்சை மிளகாய் – 4
  • கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

உளுத்தம் பருப்பை நான்கு மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் மெதுவடைக்கு அரைப்பதுபோல் நன்கு கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். பிறகு, நறுக்கிய வெங்காயம்,நறுக்கிய அரைக் கீரை, கறிவேப்பிலை ஆகியவற்றைச்

சேர்த்து வடைகளாகத் தட்டி எண்ணெய்யில் போட்டு வேக வைத்து எடுக்கவும். அரைக் கீரை வடை ரெடி…!

அரைக் கீரை கூட்டு

அரைக் கீரை கூட்டு, சளி, இருமல் போன்றவற்றைத் தீர்க்கும் மற்றும் முடிகொட்டுதல், கண் பார்வைக் கோளாறுகளுக்கும் ஏற்ற மருந்து என்று சொல்லப்படுகிறது

தேவையான பொருள்கள்

  • அரைக் கீரை – 2 கட்டு
  • கடுகு – அரை ஸ்பூன்
  • தக்காளி – 4
  • வெங்காயம் – 2
  • எண்ணெய் – 2 ஸ்பூன்
  • பெருங்காயம் – புளியங்கொட்டை அளவு
  • மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
  • துவரம் பருப்பு – 100 கிராம்
  • மிளகாய்ப் பொடி – ஒரு ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் கீரையை நன்றாக அலசி எடுத்துப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பிறகு, அதோடு துவரம் பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் போன்றவற்றைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு, குக்கரில் வேகவைத்து எடுத்து கடைந்து கொள்ளவும்.

பிறகு, வாணலியில் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிச் சேர்த்து எண்ணெய், கடுகு, பருப்புப் போட்டுத் தாளித்து,

அத்துடன் கீரையையும் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு வேகவைத்து, கடைந்த பருப்பையும் அதோடு கடைசியாகக் கலந்து கொள்ளவும். அரைக் கீரைக் கூட்டு ரெடி…!

அரைக் கீரை தோசை

அரைக் கீரைத் தோசையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்த விருத்தி உண்டாகும்.

மேலும் புதுமணத் தம்பதிகளுக்கு உணர்வைப் பெருக்கி உறவைச் சிறக்கச் செய்யும் அற்புத உணவு என்றும் சொல்லப்படுகிறது

தேவையான பொருள்கள்

  • அரைக் கீரை – ஒரு கட்டு
  • கொத்தமல்லி- ஒரு கட்டு
  • கடலை மாவு – கால் கிலோ
  • அரிசி மாவு – 50 கிராம்
  • இஞ்சி – ஒரு துண்டு
  • சின்ன வெங்காயம் (நறுக்கியது) – ஒரு கைப்பிடி
  • மிளகாய் வற்றல் – 4
  • சோம்பு – 10 கிராம்
  • பூண்டு – 6 பல்
  • வேர்க்கடலை – 100 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • நெய் – 50 கிராம்

செய்முறை

கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் நன்றாகச் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் அரிந்த பூண்டு வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு இஞ்சியை அரைத்து, சோம்பை தூளாக்கி, கொத்தமல்லி மற்றும் மிளகு சேர்க்கவும்.

பிறகு மிளகாய் வற்றலை அரைத்தும் மற்றும் வேர்க்கடலையை உடைத்து மாவில் சேர்க்கவும்.

தோசைக்கல்லில் நெய் வார்த்து, மேற்சொன்னவாறு தயார் செய்த மாவைக் கல்லில் ஊற்றி தோசை வார்க்கவும். அரைக் கீரை தோசை தயார்….!