வெங்காயத் தாள் மருத்துவ பயன்கள் மற்றும் வெங்காயத்தால் சமையல்

0

வெங்காயத் தாள் பயன்கள் மற்றும் வெங்காயத் தாள் சமையல் வகைகளான வெங்காயத் தாள் சட்னி, வெங்காயத் தாள் பச்சடி மற்றும் வெங்காயத் தாள் சூப் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை பற்றி விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

வெங்காயத் தாள்

வெங்காயத்தின் இலைதான் வெங்காயத்தாள் என்று அழைக்கப்படுகிறது. உஷ்ணத் தன்மையால், உடல் பருமனைக் குறைப்பதில் முன்னோடியாக உள்ளது. சிறுநீரக நோய்கள், மாதவிலக்குக் கோளாறுகள், குடற்புண் போன்ற பிரச்னைகள் தீரும்.

வெங்காயத் தாள்

உணவில் வெங்காயத் தாளைச் சேர்த்துக்கொண்டால் காம உணர்வு அதிகரிக்கும். நாளமில்லா சுரப்பிக் கோளாறுகளைச் சரி செய்யும். தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் இதை அடிக்கடி சாப்பிட்டால் நலம் பெறலாம்.

வெங்காயத் தாள் மருத்துவப் பயன்கள்

பாரம்பரிய மருத்துவத்தில் குறிப்பிடப் பட்டுள்ள வெங்காய தாள் மருத்துவ பயன்கள் பற்றி இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது.

இருப்பினும் தொடர்ந்து உண்ணுவதற்கு முன்னும் ஏதேனும் ஒரு நோய்க்கு மருந்தாக பயன்படுத்தும் முன்பும் மருத்துவர் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

1. வெங்காயத் தாளுடன் சீரகம், சோம்பு சேர்த்து அரைத்து, கஷாயமாகச் சாப்பிட்டால் தீராத தாகம் தீரும்.

2. வெங்காயத் தாள், பொடுதலை, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் ரத்த மூலம், பௌத்திரக் கட்டி போன்றவை குணமாகும்.

3. வெங்காயத் தாளை அரைத்து, அதில் வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.

4. வெங்காய தாள், ஓரிதழ் தாமரை இரண்டையும் சமஅளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால், விந்தின் சூடு குறையும். உடலுறவில் நீடித்த இன்பம் கிடைக்கும்.

5. வெங்காயத் தாளுடன் சிறிது இஞ்சி சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நல்ல பசி உண்டாகும்.

6. வெங்காயத் தாளுடன் ஒரு ஸ்பூன் பார்லியைப் பொடியாக்கிச் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், நீர் எரிச்சல், நீரடைப்பு நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

7. வெங்காயத் தாளை அரைத்து, அதில் கருப்பு எள், கருஞ்சீரகம் இரண்டையும் சம அளவில் கலந்து நன்கு காயவைத்து அரைத்துக்கொள்ளவும். மாதவிலக்கு வராத சமயங்களில் ஒரு ஸ்பூன் அளவுக்கு காலை மாலை என மூன்று நாள்கள் சாப்பிட்டால் பிரச்னை தீரும். இதை, கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.

8. வெங்காயத் தாளை அரைத்து, அதில் திப்பிலியைக் கலந்து காயவைத்துப் பொடியாக்கவும். இதில், அரைகிராம் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை குணமாகும்.

9. வெங்காயத் தாளை அரைத்து, அதில் ஒரு கிராம் ஜாதிக்காய் பொடியைக் கலந்து சாப்பிட்டால் காம உணர்வு அதிகரிக்கும்.

10.வெங்காயத் தாள், துத்தி இலை இரண்டையும் சமஅளவு எடுத்து அரைத்து, சிறிது மஞ்சள் தூள் சேர்த்துச் சாப்பிட்டால் குடற்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.

வெங்காயத் தாள் சமையல் :

வெங்காயத் தாள் சட்னி

வெங்காயத் தாள் சட்னி செய்முறை மற்றும் வெங்காயத்தாள் செய்வ தற்கு தேவையான பொருட்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருள்கள்

  • நறுக்கிய வெங்காயத் தாள் – 200 கிராம்
  • மிளகு – அரை ஸ்பூன்
  • பெருஞ்சீரகம் – அரை ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 4
  • பூண்டு – 10 பல்
  • தேங்காய்த் துருவல் – 50 கிராம்
  • கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
  • இஞ்சி – ஒரு துண்டு
  • பெருங்காயம் – கால் ஸ்பூன்
  • மஞ்சள் – கால் ஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • தக்காளி – 3
  • எலுமிச்சை – பாதி

செய்முறை :

வாணலியில் எண்ணெய்விட்டு, வெங்காயத் தாளைப் போட்டு, எலுமிச்சையைப் பிழிந்துவிட்டு நன்கு வதக்கவும்.

பிறகு மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை அரைத்து, வெங்காயத்தாளுடன் சேர்த்து வதக்கவும்.

தக்காளியை நறுக்கிச் சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள், பெருங்காயம் ஆகிய வற்றையும் சேர்த்து எடுத்து, லேசாக மசித்துக்கொள்ளவும்.

சிறிது எண்ணெய்யில் கடுகு, பருப்பு போட்டுத் தாளித்து, மசியலையும் சேர்த்து, லேசாகக் கொதிக்கவைத்து இறக்கவும்.

இதைத் தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் உடல் எடை வெகுவாகக் குறையும்.

வெங்காயத் தாள் பச்சடி

வெங்காயத் தாள் பச்சடி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் வெங்காயத் தாள் பச்சடி செய்முறை பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருள்கள்

  • வெங்காயத் தாள் – ஒரு கட்டு
  • இஞ்சி – ஒரு துண்டு
  • கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி
  • தக்காளி – 5
  • பச்சை மிளகாய் – 3
  • தயிர் – ஒரு கப்
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகுத் தூள் – அரை ஸ்பூன்

செய்முறை

வெங்காயத் தாளையும், கொத்தமல்லியையும் சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுத்து பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை நறுக்கிச் சேர்த்து, தயிரையும் கலந்து தேவையான உப்பையும் சேர்த்து, தக்காளி சாஸ் கலந்து சாப்பிடலாம்.

உடலை இளமையாக வைத்திருக்க உதவும் உணவாகும்.

வெங்காயத் தாள் சூப்

வெங்காயத் தாள் சூப் செய்முறை மற்றும் தேவையான பொருட்கள் பற்றி கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருள்கள்

  • வெங்காயத் தாள் – ஒரு கட்டு
  • இஞ்சி – ஒரு துண்டு
  • தக்காளி
  • தேங்காய் – ஒரு மூடி
  • குடை மிளகாய் – 1
  • கொத்தமல்லி – இரண்டு கைப்பிடி
  • உப்பு – தேவையான அளவு
  • நெய் – தேவையான அளவு

செய்முறை

குடைமிளகாய், வெங்காயத்தாள், கொத்தமல்லி ஆகிய வற்றைப் பொடிப்பொடியாக அரிந்து கொள்ளவும்.

தக்காளியை நறுக்கி இஞ்சியுடன் சேர்த்து, மிளகு தூவி அரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

தேங்காயைத் துருவி பால் எடுத்து, இரண்டையும் கலந்து கொதிக்க வைக்கவும். பிறகு, நெய் சேர்த்து அரிந்துவைத்துள்ளதையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, உப்புப் போட்டு இறக்கவும்.

இந்த சூப், சகல நோய் களுக்கும் நிவாரணம் தரக்கூடியது.