புதினா மருத்துவ பயன்கள் மற்றும் புதினா சமையல்

இந்த பதிவில் புதினா  பயன்கள் மற்றும் புதினா சமையல் வகைகளான புதினா சட்னி, புதினா சாதம் மற்றும் புதினா சூப் போன்ற ரெசிபி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை பற்றி விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

புதினா

நீர்ப்பாங்கான இடங்களில் மிகச் செழிப்பாக வளரக்கூடிய புதினாவை அனைத்து விதமான சமையலுக்கும் பயன்படுத்தலாம்.

இதன் இலைகளை ஆவி முறையில் வடித்தெடுத்துப் பெறப்படும் ‘மெந்தால்’ (Menthol), வலிநிவாரணிகளில் முக்கியப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது.

புதினா மருத்துவ

புதினா கீரையில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின்-சி, பி-காம்ப்ளக்ஸ், பாஸ்பரஸ், இரும்பு
போன்ற சத்துப் பொருள்கள் மிகுதியாக உள்ளன.

புதினாவை உணவாகச் செய்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். வாந்தி, ஜீரணக் கோளாறுகள் தீரும்.

தலைவலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் புதினாவைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் சிறந்த பலனைப் பெறலாம்.

புதினா மருத்துவ பயன்கள்

பாரம்பரிய மற்றும் சித்த மருத்துவத்தில் புதினா மருத்துவ பயன்கள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளவற்றை கீழே காணலாம்.

இருப்பினும் ஏதேனும் உடல் நலக் கோளாறு இருப்பின் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

நன்றாக பசி எடுக்க :

புதினா இலைச்சாறு, எலுமிச்சைச் சாறு இரண்டையும் தலா 100 மி.லி. அளவில் எடுத்து, கால் கிலோ தேனுடன் சேர்த்துக் காய்ச்சி இறக்கிக்கொள்ளவும்.

இதில் காலை, மாலை இரு வேளையும் 15 மி.லி.அளவுக்குச் சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.

நன்றாக சிறுநீர் பிரிய :

புதினா இலையை ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்து எண்ணெய் விட்டு வதக்கி உப்பு சேர்க்காமல் சாப்பிட்டால் நன்கு சிறுநீர் பிரியும்.

இரத்தம் சுத்தமாக :

புதினா இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சமஅளவு சேர்த்து அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தம் தூய்மையாகும்.

சுவையிண்மை நீங்க :

புதினா இலைச்சாறு, ஆரஞ்சு பழச்சாறு இரண்டையும் சமஅளவு கலந்து சாப்பிட்டால், வாந்தி, சுவையின்மை, ருசியின்மை போன்ற பிரச்னைகள் குணமாகும்.

சளி கோளாறு நீங்க :

ஒரு கைப்பிடி அளவுக்குப் புதினா இலை, மிளகு (3 எண்ணிக்கை) இரண்டையும் விழுதாக அரைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல்
கோளாறுகள் நீங்கும்.

காய்ச்சல் குணமாக :

புதினா இலையை (50 கிராம்) கஷாயமாகச் செய்து தினமும் 30மி.லி. முதல் 50 மி.லி. வரை குடித்துவந்தால் கடுமையான காய்ச்சலும் குணமாகும்.

வயிற்று வலி குணமாக :

உலர்ந்த புதினா இலையில் கஷாயம் செய்து குடித்தால் மஞ்சள் காமாலை, விக்கல், வயிற்று வலி போன்றவை தீரும்.

மாத விலக்கு கோளாறு நீங்க :

உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கறுப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

பல் கோளாறு நீங்க :

புதினா இலையை உலர்த்தி, சிறிது உப்பு கலந்து, தொடர்ந்து பல் துலக்கிவந்தால் பல்வலி, பல்கூச்சம், பல் ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பாதிப்புகள் தீரும்.

புத்துணர்ச்சி பெற :

தலைவலிக்கு, புதினாவிலிருந்து எடுக்கப்படும் ‘பெப்பர் மிண்ட் தைலம்’ உடனடி நிவாரணமும், உடலுக்குப் புத்துணர்ச்சியும் தரும்.

புதினா பயன்கள்

புதினாவை வாரத்துக்கு இரண்டு முறையாவது உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் நல்லது.

புதினா தென்னிந்திய சமயல்களில் சுவைக்காகவும், மணத்துக்காகவும் பயன்படுத்தப் படுகிறது.

புதினா கீரையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவு வகைகளான புதினா சாதம், புதினா சூப், புதினா சாலட், புதினா சட்னி போன்ற உணவுகளை வாரத்திற்கு இருமுறையாவது சேர்த்து வருவது நல்லது.

 

புதினா சமையல்

புதினா சட்னி

புதினா சட்னி செய்முறை மற்றும் புதினா சட்னி தயாரிக்க தேவையான பொருள்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருள்கள்

  • புதினா – கைப்பிடி
  • பச்சை மிளகாய் – 4
  • தேங்காய்த் துருவல் – 100 கிராம்
  • உடைத்த கடலை – 2 ஸ்பூன்
  • எண்ணெய் – 2 ஸ்பூன்
  • கடுகு – 1ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – ஸ்பூன்
  • எலுமிச்சைச் சாறு – ஸ்பூன்

செய்முறை

சுத்தம் செய்து ஆய்ந்த புதினா இலை, பச்சை மிளகாய், தேங்காய்த்துருவல், உடைத்தகடலை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து,

அரைத்து வைத்துள்ள சட்னியையும் கொட்டிக்கிளறி, எலுமிச்சை சாறு, உப்பு, தண்ணீர் ஆகியவற்றைத் தேவையான அளவில் கலந்து கிளறி இறக்கவும். புதினா சட்னி தயார்..!

புதினா சூப்

புதினா சூப் தயாரிக்க தேவையான பொருள்கள் மற்றும் புதினா சூப் செய்முறை பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருள்கள்

  • புதினா – ஒரு கைப்பிடி
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
  • தக்காளி – 2
  • வெங்காயம் – 2
  • மிளகுத் தூள் – ஒரு ஸ்பூன்
  • வெண்ணெய் – 50 கிராம்
  • மைதா – 3 ஸ்பூன்
  • பால் – அரை டம்ளர்
  • சீரகம் – சிறிதளவு
  • சோம்பு – சிறிதளவு

செய்முறை

புதினா, கொத்தமல்லி இரண்டையும் சுத்தம் செய்து ஆய்ந்து கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.தக்காளியைப் பிசைந்து கொள்ளவும்.

முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மூன்று டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும்.

கொதித்த பிறகு, வெங்காயம், தக்காளியைப் போட்டு மூடிவைக்கவும்.

20 நிமிடம் கொதித்த பிறகு, சீரகம், மிளகுத்தூள், சோம்பு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றையும் சேர்த்து சிறுதீயில் சுமார் 20 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருக்கிய பிறகு மைதாவைக் கலந்து, சற்று வதக்கி அதில் ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து இறக்கிவிடவும்.

மறுபடியும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் சேர்த்து, மெல்லிய தீயில் கொதிக்க விடவும்.

இதனுடன், ஏற்கெனவே கொதிக்கவைத்து இறக்கியதை வடிகட்டி சேர்க்கவும்.

தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும். புதினா சூப் தயார்…!

புதினா சாதம்

புதினா சாதம் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை பற்றி கீழே காணலாம்.

தேவையான பொருள்கள்

  • பாஸ்மதி அரிசி – அரை கிலோ
  • புதினா – 100 கிராம்பச்சை
  • மிளகாய் – 6
  • எண்ணெய் – 100 மி.லி.
  • சீரகம் – ஒரு ஸ்பூன்
  • வெங்காயம் – 2
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் பாஸ்மதி அரிசியை நன்றாகக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

பிறகு, அதில் ஒன்றுக்கு ஒன்னே முக்கால் பங்கு தண்ணீர் வைத்து, சிறிது உப்பு, இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து, குக்கரில் வேக வைத்து இறக்கி, ஒரு பெரிய தட்டில் கொட்டி ஆறவிடவும்.

அடுத்து, ஆய்ந்து அலசிய புதினா, பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு, சீரகம், நறுக்கிய வெங்காயம்,

உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி,

அரைத்து வைத்துள்ள கீரையையும் அதோடு சேர்த்து நன்கு வதக்கி 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, சாதத்தில் கொட்டிக் கிளறி, உப்பு சேர்த்து இறக்கவும். புதினா சாதம் தயார்….!